Monday, March 22, 2010

அந்தமான் தீவுகளின் பாரம்பரிய மொழிகளின் எதிர்காலம்?


'போ' மொழி பேசும் மக்கள், கடந்த 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமானில் வசித்துவந்த, உலகின் மிகப்பழமையான கலாசாரம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மாபெரும் அந்தமானிய மொழிகளாக பத்து மொழிகள் உள்ளன. இதில் 'போ'வும் ஒன்று.

இந்தப் பத்து மொழிகளையும் பேசுவோர் மொத்தமே 52 பேர்தான் இருக்கிறார்கள். அவர்களில், கடந்த வாரம் இறந்த போவா ஸ்ரதான் மூத்தவராகக் கருதப்படுகிறார். கடந்த 1858ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் கீழ் அந்தமான் வந்தபோது, 5 ஆயிரம் பழங்குடி மக்கள் இருந்தார்கள்.
பெரும்பாலானோர் கொல்லப்பட்டார்கள். பலர், காலனி ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்ட நோய்களால் இறந்துவிட்டார்கள்.
அடக்குமுறை மூலம் பழங்குடி மக்களை அமைதிப்படுத்த முயன்ற பிரிட்டிஸ் நாட்டவர் , அது முடியாமல் போனதால், அவர்களைப் பிடித்து, அந்தமான் இல்லம் என்ற இடத்தில் வைத்து அவர்களை பெரும்பான்மை மக்களின் கலாசாரத்தைக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள்.
அந்த இல்லத்தில் 150 குழந்தைகள் பிறந்த போதிலும், இரண்டு வயதுக்கு மேல் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
தற்போது உயிருடன் வாழும் அந்தமான் பழங்குடி மக்கள், தஙகள் உணவு மற்றும் இருப்பிடத்துக்கு இந்திய அரசாங்கத்தையே நம்பியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போரோ என்பவர் இறந்தபோது, அவருடைய மொழியான கோராவும் மறைந்துபோனது. இப்போது, போ மொழிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டபோது, மரத்தின் மேல் ஏறி தன்னைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு அப்போது உறுதியுடன் இருந்திருக்கிறார் போவா ஸ்ர.

போவா ஸ்ரவை பல ஆண்டுகளாக அறிந்த மொழியியல் நிபுணரும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியருமான அன்விதா அப்பி, தனது தாய் மொழியைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லை என்ற விரக்தியால் போவா ஸ்ர பெரிதும் கவலைப்பட்டதாகத் தெரிவித்தார்.

போவா ஸ்ர இறந்ததன் மூலம், அந்த இனம் இப்போது, வெறும் நினைவாக மாறிவிட்டதாகவும், அந்தமான் தீவில் உள்ள மற்ற பழங்குடி மொழிகளும் அவ்வாறு அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் கரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment