Wednesday, April 28, 2010
லிட்டில் மாஸ்டர் சச்சினின் 37 ஆவது பிறந்த நாள்
மும்பை மகாராஷ்ரா மாநிலத்தில் நடுத்தர குடும்பத்தின் 4ஆவது புதல்வராக, 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆந் திகதி சச்சின் ரமேஷ் டெண்டுல்கார் பிறந்தார். இவர் மராத்தியராவார்.
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பாடசாலையின் மாணவர். தனது 16ஆவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார்.
பாடசாலை சார்பாக விளையாடிய வினோத் கம்ப்ளியும் இவரும் இணைந்து 664 ஓட்டங்களைப் பெற்றனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைப் பெற்றார். சச்சினின் மாநிலங்களுக்கிடையிலான முதலாவது போட்டி இது. அப்போது இவரது வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெண்டுல்கார் 1989ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் முதன் முறையாக இந்தியாவின் சார்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவரால் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது.
முதலாவது சதம்
1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து நீடித்து வரும் இவர், டெஸ்ட் போட்டிகளில் 13,447 ஓட்டங்களையும் (சராசரி ஓட்ட வீதம் 55.56) ஒரு நாள் போட்டிகளில் 17,598 ஓட்டங்களையும் (சராசரி ஓட்ட வீதம் 45.12) எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 47 சதங்கள், 54 அரைச் சதங்களையும் ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களையும் 93 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார்.
சச்சினின் பந்து வீச்சைப் பொறுத்த வரை வலது கை இடச்சுழல், வலது கை வலச்சுழல், வலது கை இடத்திருப்பு வீரராவர். டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுக்களும் (சராசரி வீதம் 52.25) ஒரு நாள் போட்டிகளில் 154 விக்கெட்டுக்களும் ( சராசரி வீதம் 44.56) எடுத்துள்ளார்.
சிறந்த பந்து வீச்சாக டெஸ்ட் போட்டிகளில் 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் ஒரு நாள் போட்டிகளில் 32 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் எடுத்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200 ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்காரைச் சாரும். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிகமான துடுப்பாட்ட மட்டை உபயோகித்த வீரர்களில் பிரட்மனுக்கு அடுத்த நிலையிலும் , ஒரு நாள் போட்டிகளில் ரிச்சட்டுக்கு அடுத்த நிலையிலும் உள்ளார்.
பல விருதுகள்
1994 அர்ஜூனா விருது, 1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது, 1999 பத்மஸ்ரீ விருது, 2008 பத்மவிபூஷன் விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார்.
2010 பெப்ரவரி 24, குவாலியரில், தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் எடுத்து உலக கிரிக்கெட்டில் சாதனையை ஏற்படுத்தினார். இதற்காக எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கார். 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் சாத்தியப்படுத்திவர்.
1991-1992 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது சிட்னியில் சச்சின் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்கள் குவித்தார்.
1994 செப்டம்பர் 9 இல் ஒரு நாள் சர்வதேச போட்டியின் முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கையில் நிறைவு செய்தார்.
1996 உலகக் கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்கள்(523)க் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கொல்கத்தா ஈடன் கார்டனில் அரை இறுதியில் சச்சின் வெளியேறியதும் ஒருவர் பின் ஒருவர் பரிதாபமாக ஆட்டமிழந்தனர். அந்நேரத்தில் ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட, இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது அரையிறுதியில் 65 ஓட்டங்களை பெற்றார்.
1998 இல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் வரிசையாக மூன்று சதங்கள் அடித்து வெற்றி வாகை பெற்றுத் தந்தார். அதே வருடம் சார்ஜாவில் நடைபெற்ற கொக்கா-கோலா முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்து கிண்ணத்தைத் தனி ஒருவராக பெற்றுத் கொடுத்தார்.
1999இல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதுகில் வலியையும் வைத்துக் கொண்டு அவர் குவித்த 136 ஓட்டங்கள் இன்றும் மறக்கவியலாதது. அப்போட்டியில் கடைசி நான்கு விக்கெட்டுகள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேற இந்தியா தோல்வியடைந்தது.
1999 உலகக் கிண்ண போட்டிகளின் நடுவே தந்தையை இழந்த சச்சின் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சிம்பாப்வே அணியுடனான ஒரு போட்டியை விட்டுக் கொடுத்து இந்தியா வர வேண்டியிருந்தது. பின்னர் மீண்டும் அணியில் திரும்பி கென்யாவுக்கு எதிராக 141 குவித்தார். அந்தச் சதத்தை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக் கூறி கண்ணீர் மல்கினார்.
தொடர் ஆட்ட நாயகர் விருது
2003 உலகக் கிண்ண போட்டிகளின் 11 ஆட்டங்களிலிருந்து 673 ஓட்டங்களை எடுத்து இந்தியாவின் இறுதிப் போட்டிக்கு காரணமானார். இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந் தாலும், தொடர் ஆட்டநாயகன் விருது வழங்கி சச்சின் கௌரவிக்கப்பட்டார்.
2005, டிசம்பர் 10 அன்று கவாஸ்கரின் டெஸ்ட் சதங்கள் 34 சாதனையை இலங்கைக்கு எதிராக முறியடித்தார்.
2007-2008 இல் ஆவுஸ்திலியாவுக்கு எதிரான காமன்வெல்த் பேங்க் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்து தொடர் வெற்றிக்கு வழி செய்தார். 2008 ஒக்டோபர் 17இல் மேற்கிந்திய தீவு ஆட்டக்காரர் லாராவின் சாதனையை முறியடித்து அதிக டெஸ்ட் ஓட்டங்கள் 12, 273 (நவம்பர் 10, 2008 இன் படி) எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சச்சின் விளையாடிய முதல் 78 ஒரு நாள் போட்டிகளில் சதமேதும் எடுக்கவில்லை என்பது ஒரு ஆச்சரியமான தகவல். 23 முறை சச்சின் 90-99 ஓட்ட இடைவெளியில் வெளியேறி சதங்களைத் தவற விட்டுள்ளார்.
இரு முறை அணித்தலைவர்
இருமுறை அணித்தலைவர் பொறுப்பு ஏற்றும் அவர் தலைமையின் கீழ் சென்ற இந்திய அணி தகுந்த வெற்றிகளைப் பெறவில்லை.
2001 போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாகப் போட்டி நடுவர் மைக் டென்னஸ் சச்சின் மேல் குற்றம் சாட்டி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.
தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது. இனவெறியினால் (Racism) தான் நடுவர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார் என பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டது. இதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு தடையை நீக்கியது.இந்திய நாடாளுமன்றம் வரை இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2003 இல் முழங்கை வலியினால் (Tennis elbow) அவதிப்பட்டு 10 மாதங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற முடியாமலிருந்தார்.
2004 இல் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 194 ஓட்டங்கள் குவித்து ஆடிக் கொண்டிருந்த போது அணித்தலைவர் டிராவிட் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக கூறியதால் சச்சினின் இரட்டை சதம் சாத்தியமில்லாமல் போனது.
பிரட்மன் பாராட்டு
உலகின் தலை சிறந்த ஆஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் சர்டான் பிரட்மன் சச்சினின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தைப் போன்றே இருப்பதாகக் கூறியுள்ளார். பிரட்மனின் மனைவியாகிய ஜெசியும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.
1991-1992 ஆவுஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் போது வேகப்பந்து வீச்சாளரான மேர்வ் ஹியூஸ் அணித்தலைவரான அலன் பார்டரிடம் “இந்த பையன் உன்னை விட அதிக ஓட்டங்கள் குவிப்பான்” என்றும் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வோன் தனது புத்தகத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களின் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம் கொடுத்து கௌரவித்துள்ளார்.
தற்போது மும்பை அணி சார்பில் விளையாடி வரும் சச்சினுக்கு வலது கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் 5 தையல்களும் போடப்பட்டுள்ளது. தற்போது மும்பை அணி வீரராக செயற்படும் இளம் வீரர் சகீர் கான் இறுதிப் போட்டியில் ஐபிஎல் கிண்ணத்தை வெல்வதே சச்சினுக்கு நாங்கள் கொடுக்கும் பிறந்த நாள் பரிசு என்றும் தெரிவித்துள்ளார்.
38 வயதாகும் சச்சினின் மனைவி அஞ்சலி, மகன் அர்ஜுன் மகள் சாரா ஆகியோருடன் நாமும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
-எல்.ஜெ.ஜீவராஜ்
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22490
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment